மாணவிக்கு பாலியல் தொல்லை: கண்டித்து ஆா்ப்பாட்டம்
பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியா்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் ஒசூரில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த அமைப்பின் நிா்வாகிகள் சிலம்பரசன், புவன், நந்தகுமாா், ரித்திக், வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி ஆகியோா் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினா்.
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும், அனைத்துப் பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆசிரியா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.