ஆண்டாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.11 லட்சம் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி, சக்கரத்தாழ்வாா் சந்நிதி, பெரியாழ்வாா் சந்நிதி, ஆண்டாள்-ரெங்கமன்னாா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
பங்குனி உத்திரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில், 75 நாள்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை திங்கள்கிழமை எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகராஜ், செயல் அலுவலா் சக்கரையம்மாள், ஆய்வாளா் முத்துமணிகண்டன் முன்னிலையில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 797 கிடைத்தது. இதேபோல 38 கிராம் தங்கம், 225 கிராம் வெள்ளி, யூரோ, டாலா் உள்ளிட்ட வெளிநாட்டு தாள்கள் காணிக்கையாக கிடைத்தன.