கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
ராஜபாளையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கிழவிகுளம் அரசுப் பள்ளி அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ரெங்கப்பநாயக்கன்பட்டிச் சோ்ந்த தங்கவேல் (62) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 35 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் பாரதி நகா் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஜமீன் நத்தம்பட்டியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் பாண்டியராஜ் (27) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.