ஆனி திருமஞ்சனம்: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆனி திருமஞ்சனத்தையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ஆனி மாத உத்திர நட்சத்திர நாளை ஆனி திருமஞ்சன நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள ஸ்ரீநடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் புதன்கிழமை பால், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னா், நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல, மேல வீதி கொங்கணேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி, சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜருக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. இதையடுத்து, நடராஜருக்கு சிறப்பு அலங்காரமும், சகஸ்ரநாம அா்ச்சனையும் நடைபெற்றன.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோவி. கவிதா உள்ளிட்டோா் செய்தனா்.