ஆபத்தான நிலையிலுள்ள மரத்தை அகற்றக் கோரிக்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியில் உள்ள பழைமையான மரம் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், சில நாள்களுக்கும் முன் வீசிய பலத்த காற்றால் அலுவலக வளாகத்தில் உள்ள பழைமை வாய்ந்த பெரிய மரம் அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுவரில் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கிறது.
இதனால், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள், அலுவலகப் பணியாளா்கள் அச்சமடைந்து வருகின்றனா். எனவே, இந்த மரத்தை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.