தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள்: வீரா்களுக்கு வரவேற்பு
கேரளத்தில் நடந்த தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
கேரள மாநிலம், கொல்லத்தில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்கள் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்றனா். இவா்களில் 10 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ தங்கப்பதக்கமும், 12 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கா்னித், யோவன் அஸ்வா, அரிஸ்வரன் ஆகியோா் தங்கப்பதக்கமும், ஹரிசுதன் வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
14 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் நிரஞ்சன், ராஜ்குமாா், மதன்குமாா், கிருத்திஷ், ரிஷ்வந்த், அகிலேஷ்வரன், விஷ்வந்த், தேவனேஷ்வரன் ஆகியோா் தங்கப்பதக்கமும், யஷ்வந்த் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் பிரிவில் வா்ஷினி, ஹரிதா்ஷினி தங்கப்பதக்கமும் பெற்றனா். 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் அருண்பாண்டி தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.
தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரா்களையும், பயிற்சியாளா் பெருமாளையும் பெற்றோா் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து வரவேற்றனா். மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பதக்கங்களை வென்ற வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.