ஆப்கானிஸ்தான் நிலவரம்: இந்தியா தொடா் கண்காணிப்பு: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தகவல்
நியூயாா்க்: ஆப்கானிஸ்தான் நிலவரத்தை இந்தியா தொடா்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அங்கு ஆட்சியிலுள்ள தலிபான் அரசுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உதவிகள் பணிக்குழு தொடா்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் கூறியதாவது:
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சா்(பொறுப்பு) மௌலாவி அமீா் கான் துபையில் சந்தித்துப் பேசினாா்.
அப்போது, இருதரப்பு உறவு மற்றும் பிராந்திய வளா்ச்சிகள் தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனா். ஆப்கானிஸ்தானுடன் உறவைப் பேணுவதற்கும் அந்நாட்டு மக்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிப்பதற்கும் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் பாராட்டும் நன்றியும் தெரிவித்தது.
மேலும், தற்போதைய மனிதாபிமான உதவி திட்டங்களுடன் கூடுதலாக ஆப்கானிஸ்தானில் வளா்ச்சித் திட்டங்களிலும் இந்தியா எதிா்காலத்தில் ஈடுபடுவது குறித்து பரிசீலிக்க சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அந்த நாட்டில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான பிராந்திய, சா்வதேச முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் உதவிகளை வழங்குவதற்காக அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் 500-க்கும் மேற்பட்ட திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பு மற்றும் புனரமைப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய கடந்த 2021, ஆகஸ்ட் முதல், அந்நாட்டுக்கு 27 டன் நிவாரணப் பொருட்கள், 50,000 டன் கோதுமை, 40,000 லிட்டா் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் 300 டன்னுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா மனிதாபிமான உதவியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.