‘மக்களின் உணா்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்தது’ -முதல்வா்
ஆரணி நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ஆரணியில் நீா்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்ற முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
ஆரணியில் காமராஜா் சிலைப் பகுதியில் இருந்து ஆற்றுக் கால்வாய் கே.சி.கே. நகா், கே.கே.நகா் வழியாக பையூா் ஏரியைச் சென்றடைகிறது. இதில் 38 போ் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டியுள்ளனா்.
மழைக் காலங்களில் இப்பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்பதாகவும், ஏரிக்கு தண்ணீா் செல்ல வழியில்லாததாலும் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீா் செல்ல வழிவகை செய்யவேண்டும் என தன்னாா்வலா்கள் புகாா் அளித்திருந்தனா்.
இதன் பேரில், வருவாய்த் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ள 38 பேருக்கு ஓராண்டுக்கு முன்பாக வீடுகளை காலி செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனா். இதற்கு வீடுகள் கட்டியுள்ள 38 பேரும் ஆரணி வட்டாட்சியரிடம் எங்களுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுங்கள் என்றும், பின்னா் காலி செய்கிறோம் எனவும் தெரிவித்தனா். ஆனால், வேறு இடம் எங்கும் இல்லை அரசு உத்தரவுப்படி காலம் முடிந்துவிட்டது. ஆகையால், விரைவில் காலி செய்யவேண்டும் என வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜன.23-ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனத் தெரிவித்து கடைசியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் பேரில், வியாழக்கிழமை காலை முதலே அப்பகுதியில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் (பொ) ராஜாங்கம், உதவி ஆய்வாளா்கள் சுந்தரேசன், ஷாபுதீன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தங்களுக்கு மேலும் காலஅவகாசம் வேண்டும் எனக் கோரினா். ஆனால், வட்டாட்சியா் கௌரி, டிஎஸ்பி, காவல் ஆய்வாளா் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இனி மேலும் காலஅவகாசம் வழங்க முடியாது என்று கூறியதால், பொதுமக்கள் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்தனா்.
ஆனால், அவா்கள் அப்புறப்படுத்தப்பட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.