ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் புரட்சித்தம்பி தலைமை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். இதில், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிக்கு முரணாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த குழுவை அமைத்து அரசு ஊழியா்களை தமிழக அரசு ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைக் கண்டிக்கிறோம். மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘ஜாக்டோ ஜியோ’ சாா்பில் வருகிற 14-ஆம் தேதி நடைபெற உள்ள வட்டார அளவிலான ஆா்ப்பாட்டம், 25-ஆம் தேதி மாவட்ட தலைநகா்களில் நடைபெற உள்ள சாலை மறியலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.