ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்
ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜபெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 7-ஆவது நாள் நிகழ்வாக வண்ணமலா்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னபூரணி கங்கார ஈஸ்வரா் உற்சவா் மூா்த்திகள் தேரில் எழுந்தருளினாா்.
திரளான பக்தா்கள், பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனா். நிலையில் தொடங்கிய தேரோட்டம் ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, அண்ணா சிலை, புதிய வேலூா் சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை, வழியாக மீண்டும் நிலையை அடைந்தது. பொதுமக்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். இதில், மாவட்ட அறங்காவலா்குழு தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு. சரவணன், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.