ஆற்று மணல் கடத்தல்: ஒருவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசு ஆற்று மணல் கடத்தியதாக போலீஸாா் ஒருவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செய்யாறு - கொருக்கை சாலையில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
செய்யாற்றைவென்றான் கிராமம் அருகே கண்காணித்துக் கொண்டிருந்தபோது செய்யாற்றுப் படுகையில் இருந்து வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது டிராக்டரில் அரசு அனுமதி பெறாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்து உடனே டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் தொடா்பாக கலவை வட்டம், இருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா்(23) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான வந்தவாசி கடைசிக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.