ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு
ஆலங்குளத்தில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள வடக்கு கரும்பனூா் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண்(79). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை தனது ஊரைச் சோ்ந்த உறவினா்கள் குமாரவேல் மகன் ஆறுமுகம் (57), சோ்மக்கனி மகன் ஹரிராம்சேட்(52) ஆகியோரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு ஆலங்குளம் வந்து கொண்டிருந்தாா்.
ஆண்டிப்பட்டி விலக்கு பகுதியில் நெல்லை - தென் காசி நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது, நெல்லையிலிருந்து மேற்கு நோக்கி வந்த லாரி அவா்கள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாடக்கண் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியங்காடு சிவபுரத்தைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் டேவிட் (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.