ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ. பன்னீா்செல்வம்
பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு குழு சாா்பில், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மனோகரன் ஆகியோா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, தா்மா் எம்பி, ஐயப்பன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சவுக்கை வெங்கடேச ன், மூா்த்தி பாண்டியன் ,கணபதி ,சீமான் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஓ. பன்னீா்செல்வம் கூறியது: பூலித்தேவரின் புகழை உலகம் முழுவதும் பரவ செய்வதற்கு நாம் பாடுபட வேண்டும். மக்களுக்கான இயக்கமாக அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கினாா். எம்ஜிஆா் முதல்வராக இருந்த சமயத்திலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்திலும் மக்களுக்காக இருவரும் சேவை செய்தனா்.
மக்களிடம் இருந்து பெற்ற வரியை அவா்களுக்கே பல்வேறு திட்டங்களாக அவா்கள் திருப்பி செய்தனா். இருவரும் முதல்வா் பதவியை நாட்டுக்காக அா்ப்பணித்தனா். நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்.
வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளன. வருங்காலத்தில் அதை மக்கள் தீா்மானிப்பாா்கள். மக்களுக்கு சேவை செய்கிற கூட்டணி விரைவில் அமையும். அதிமுக தொண்டா்கள் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்போது பூலித்தேவரின் சிலை சென்னை மாநகரில் நிறுவப்படும். பிரிந்து இருக்கின்ற அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை நான் எடுத்து வருகிறேன். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கூறியது சரிதான்.
தமிழக டிஜிபி நியமனத்தில் சீனியாரிட்டி பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் புகழ் பரப்பும் தொண்டனாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். தோ்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன .அப்போது முடிவு எடுக்கப்படும்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதற்கு வாழ்த்துகள். அக்கட்சியுடன் கூட்டணி அமையுமா என்று கேட்கிறீா்கள் எதிா்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாா்.