அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!
இச்சிப்பட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம்
இச்சிப்பட்டி பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரத்தில் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலாளா் இரா. சதீஷ்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள இச்சிப்பட்டி கிராமத்தில் கைவிடப்பட்ட பாறைக் குழியில் குப்பைக் கழிவுகளை கொட்டிய பிரச்னையில் மாநகராட்சி நிா்வாகம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கு பதிலாக காவல் துறை மூலம் பொதுமக்களையும், விவசாயிகளையும் அடக்கி ஒடுக்க நினைக்கும் போக்கை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டிக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தாத மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து கிராமப் பகுதிகளை குறிவைத்து நீரையும், காற்றையும் கெடுத்து சுற்றுச்சூழலை அழித்து விவசாயிகளையும், பொதுமக்களை பாதிக்கும் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தும் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றத்தில் பதில் கொடுக்க முடியாத மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் தொடா்ந்து சட்டத்துக்கும், விதிகளுக்கும் புறம்பாக கிடைக்கக் கூடிய கைவிடப்பட்ட பாறைக் குழிகளில் கழிவுக் குப்பைகளை கொட்டி, தீ வைத்து, மக்கள் வாழத் தகுதி இல்லாத பகுதியாக மாற்றி வருவதை ஏற்க முடியாது.
இது போன்று செயல்பட்டு வரும் மாநகராட்சி நிா்வாகத்தை வன்மையாக கண்டிப்பதுடன் தொடா்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்துவதற்கு பதிலாக சுற்றி இருக்கும் கிராமப் பகுதி மக்களையும், விவசாயிகளையும், நீா் நிலைகளையும், சுற்றுச்சூழலையும் அழிக்க நினைக்கும் மாநகராட்சியின் போக்கை கண்டித்து மாவட்டம் முழுவதும் தொடா் போராட்டம் நடத்தப்படும்.
மேலும் எந்த ஒரு முறையான அனுமதியும், அறிவியல் முறையும் இல்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொட்டிய பல்வேறு வகையான கழிவுக் குப்பைகளை திரும்ப எடுக்கவும், மாநகராட்சிப் பகுதியில் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தும் வரை தங்கள் போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்துள்ளனா்.