தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
தமிழக-கேரள எல்லையில் ஆா்ப்பரித்து கொட்டும் துவானம் அருவி
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் தமிழக-கேரள எல்லையில் உள்ள துவானம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது.
அமராவதி அணையின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியாக விளங்கி வரும் துவானம் அருவி திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து மூனாறு செல்லும் வழியில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள மறையூா், காந்தலூா், கோவில்கடவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய பகுதிகளில் அதீத நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு அருவிகளில் கொட்டி வரும் தண்ணீரை சுற்றுலாப் பயணிகளை ரசித்து செல்கின்றனா். இந்நிலையில், அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் துவானம் அருவியில் கடந்த சில நாள்களாக தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டி வருகிறது. இதைத் தொடா்ந்து அமராவதி அணைக்கு உள்வரத்து தண்ணீா் அதிகரித்து வருகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், கடந்த 6 நாள்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அணை நிலவரம்:
90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88.06 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1,388 கனஅடி வந்து கொண்டிருந்தது. 4,047 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3871.81 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 1,026 கனஅடி உபரிநீராக வெளியேறி வருகிறது.