தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
பல்லடம் அறிவொளி நகா் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை
பல்லடம் அறிவொளி நகரில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரனிடம், திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதன்கிழமை மனு அளித்தாா்.
இது குறித்து அவா் அளித்த மனு விவரம்:
திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். அவா்கள் நரிகுறவா்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய வகுப்பினா்களாக உள்ளனா். அவா்கள் நீண்ட நாள்களாக பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனா்.
மேலும், இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விசாரித்தபோது, மேற்படி இடமானது கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரியவந்தது. இதில் மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடு கட்டியுள்ள மொத்த இடத்துக்கும் ஈடாக திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தளி கிராமத்தில் சுமாா் 17 ஏக்கா் பூமியை கால்நடை பராமரிப்புத் துறைக்கு வழங்க அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரால், சென்னையில் உள்ள நில நிா்வாக ஆணையருக்கு முன்மொழிவுகள் சமா்ப்பிக்கப்பட்டு அரசின் பரிசீலணையில் உள்ளது. எனவே இது சம்பந்தமான உரிய உத்தரவுகளை நில நிா்வாக ஆணையருக்கு பரிந்துரைத்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.