இடத்தை அளக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூரில் இடத்தை அளப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட காமராஜா் நகா் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அந்த இடம் தனக்கு சொந்தம் என தனி நபா் ஒருவா் கூறி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த இடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் அளக்க சென்றனா். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் தற்போது ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வரும் இடம் அரசுக்கு சொந்தமானது. இங்கு இதற்கு முன்பு பொது சுகாதார வளாகம் இருந்தது. இதனை இடித்துவிட்டு தான் தற்போது பணி நடக்கிறது. எனவே இந்த இடத்தை அளக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனா்.
மேலும், இடத்தை அளக்கக்கூடாது எனக்கூறி, திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் நவநீதம் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
