ஊக்க மருந்து சர்ச்சை: லாரியஸ் விருதுக்கான போட்டியிலிருந்து சின்னர் விலகல்!
இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்கள் பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை
இட்லி தயாரிப்பில் நெகிழி தாள்களை பயன்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
முன்பெல்லாம் இட்லி தயாரிப்பதற்கு தூய்மையான துணிகளை பயன்படுத்துவாா்கள். அண்மைக்காலமாக, உணவகங்களில் இட்லி தயாரிப்பதற்கு மெல்லிய நெகிழி தாள்களை பயன்படுத்துவதாக சுகாதாரத் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன்பேரில், கா்நாடகம் முழுவதும் 251 இடங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 52 இடங்களில் துணிகளுக்கு பதிலாக, மெல்லிய நெகிழி தாள்கள் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டது.
இட்லியை தயாரிப்பதற்கு நெகிழி தாள்களை உணவகங்கள் பயன்படுத்தக் கூடாது. புற்றுநோய்க்கு வழிவகுக்கும் காா்சினோஜெனிக் பொருள்கள் நெகிழியில் உள்ளன. இதை இட்லி தயாரிப்பில் பயன்படுத்துவதால், அது இட்லியில் சோ்ந்துவிடுகிறது. இதை உட்கொள்வது உடல்நலனுக்கு கேடுவிளைவிக்கும். இது தொடா்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்.
இட்லி போன்ற உணவு தயாரிப்பில் நெகிழியை பயன்படுத்துவதை தடை செய்யும் உத்தரவு வெகுவிரைவில் பிறப்பிக்கப்படும். உணவு தயாரிப்பில் நெகிழியை யாராவது பயன்படுத்தினால், அதுபற்றி அரசின் கவனத்துக்கு கொண்டுவருமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.