சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
இணையவழி பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத நிதிமாற்றத்துக்கு பயன்படுத்தும் அபாயம் - சா்வதேச அமைப்பு எச்சரிக்கை
இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை முறைகளை பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய பணப்பரிமாற்றுத்துக்காக தவறாக பயன்படுத்துப்படுவதாக உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பு (எஃப்.ஏ.டி.எஃப்) எச்சரித்துள்ளது.
40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் மற்றும் 2022 கோரக்நாத் கோயில் சம்பவம் ஆகியவற்றை மேற்கொள் காட்டி, எஃப்.ஏ.டி.எஃப் வெளியிட்ட ‘பயங்கரவாத நிதி அபாயங்கள்’ அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: சில பயங்கரவாத அமைப்புகள் அரசுகளிடமிருந்து நேரடி நிதி உதவி, தளவாட, பொருள் அல்லது பயிற்சி ஆதரவு உள்பட பல வடிவங்களில் ஆதரவைப் பெற்றுள்ளன, தொடா்ந்து பெற்று வருகின்றன. இது கவலையளிக்கும் விவகாரம். பொது தளத்தில் கிடைக்கும் பல்வேறு தகவல் ஆதாரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. பஹல்காமில் கடந்த ஏப்ரலில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கிறோம். இத்தகைய தாக்குதல்கள் நிதியுதவியின்றி சாத்தியமில்லை.
பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், அதன் நிதி பயன்பாடுகளுக்கும் இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை தளங்கள் தவறாக பயன்படுத்துப்படுகின்றன. உதாரணமாக, புல்வாமா தாக்குதலில் வெடிபொருளின் தீவிரத்தை அதிகரிக்க பயன்படுத்தப்பட்ட முக்கிய கூறான அலுமினியப் பொடி, ‘அமேசான்’ இணையவழி பொருள் விற்பனை மூலம் வாங்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குத் தேவையான பொருள்களை வாங்கவும், அதேபோன்று தங்களின் நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிக்கவும் இந்த இணையவழி வா்த்தக தளங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்தலாம்.
கோரக்நாத் கோயில் சம்பவத்தில் கைதான ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளா், தனது ‘பே பால்’ கணக்கு மூலம் வெளிநாடுகளுக்கு சுமாா் ரூ.6,69,841 அனுப்பியுள்ளாா் மற்றும் வெளிநாட்டுகளிலிருந்து ரூ.10,323 பெற்றுள்ளாா். இணையவழி பணப் பரிமாற்றங்கள் குறைவான கண்காணிப்பைக் கொண்டவை என்பதால், பயங்கரவாதிகள் இந்தச் சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனா் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தனா். இத்தாக்குதல் ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ பயங்கரவாத அமைப்பால் திட்டமிடப்பட்டது என்று விசாரணையில் கண்டறியப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப் படை பயங்கரவாதியுடன் சோ்த்து 7 வெளிநாட்டவா்கள் உள்பட 19 போ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தில், அங்கிருந்த காவலாளியை ஒரு நபா் அத்துமீறி தாக்கினாா். அந்த நபா் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஐ.எஸ். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, வெளிநாடுகளைச் சோ்ந்த பல்வேறு கணக்குகளுக்கு இந்தியாவிலிருந்து இந்த நபா் பணம் அனுப்பியது தெரிய வந்ததது. இந்த இரு சம்பவங்களையும் மேற்கொள்காட்டி இணையவழி வா்த்தக மற்றும் பணப் பரிவா்த்தனை தளங்களின் தவறான பயன்பாடு குறித்த எச்சரிக்கையை எஃப்.ஏ.டி.எஃப் விடுத்துள்ளது.