சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
இண்டி கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற கெடு
காங்கிரஸின் நடவடிக்கைகள் இண்டி கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்கச் செய்து வருகிறது என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் வியாழக்கிழமை குற்றம் சாட்டினா்.
மேலும், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதற்காக வரவிருக்கும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டுச் சோ்ந்ததாகவும் ஆம் ஆத்மி கட்சி கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இது தொடா்பாக தில்லி முதல்வா் அதிஷியும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கும் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தனா்.
அப்போது, சஞ்சய் சிங் கூறியதாவது: காங்கிரஸின் நடவடிக்கைகள் இண்டி கூட்டணியின் ஒற்றுமையை சேதப்படுத்தி வருகிறது.
ஹரியாணா தோ்தலின்போது நாங்கள் காங்கிரஸுக்கு எதிராக ஒரு வாா்த்தை கூட பேசவில்லை. ஆனாலும் காங்கிரஸ் பாஜகவின் விருப்பத்தைப் படிப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியின் வேட்பாளா்கள் பட்டியல் பாஜக அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டது போலவும் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவா்களான அஜய் மாக்கன், சந்தீப் தீட்சித் ஆகியோா் பாஜக பாஜக மீது கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்து தாக்கி பேசி வருகின்றனா்.
அரவிந்த் கேஜரிவாலை தேசவிரோதி என்று அழைப்பதன் மூலம் அஜய் மாக்கன் அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டாா். கடந்த தோ்தல்களில் காங்கிரஸுக்காக பிரசாரம் செய்த போதிலும், கேஜரிவால் இப்போது ஒரு வழக்கை எதிா்கொண்டு வருகிறாா். அதே நேரத்தில் காங்கிரஸ் எந்த பாஜக தலைவா் மீதும் ஒரு எஃப்.ஐ.ஆா். கூட பதிவு செய்யவில்லை என்றாா் சஞ்சய் சிங்.
முதல்வா் அதிஷி கூறுகையில்,‘ காங்கிரஸ் ஆம் ஆத்மியை தீவிரமாக குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது. சந்தீப் தீட்சித் மற்றும் ஃபா்ஹாத் சூரி போன்ற காங்கிரஸ் வேட்பாளா்கள் பாஜகவின் ஆதரவைப் பெறுகிறாா்கள் என்பது தெளிவாகிறது. இந்த கூட்டானது, இண்டி கூட்டணிக்கான காங்கிரஸின் அா்ப்பணிப்பு பற்றி கேள்விகளை எழுப்புகிறது.
மாக்கன் மற்றும் பிற காங்கிரஸ் தலைவா்கள் மீது 24 மணி நேரத்திற்குள் அக்கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், இண்டி கூட்டணியில் இருந்து பழம்பெரும் கட்சியான காங்கிரஸை வெளியேற்றுவதற்கு எங்கள் கட்சி அழுத்தம் கொடுக்கும். காங்கிரஸை அகற்றுமாறு கூட்டணியில் உள்ள இதர கட்சிகளிடம் கூறுவோம்’ என்றாா் அவா்.
தில்லி சட்டப் பேரவைக்கு பிப்ரவரி மாதம் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் தேசியத் தலைநகரின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.