தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது அதிமுகவின் கடமை! - பிரேமலதா விஜ...
’இது திமுக தலைமையின் தனி கணக்கு’ - மாநிலங்களவை வேட்பாளர் தேர்வும் பின்னணியும்!
தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே திமுக தரப்பில் உள்ள நான்கு இடங்களுக்கு நிர்வாகிகள் முட்டி மோதத் தொடங்கிவிட்டார்கள். ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களைத் தாண்டி கூட்டணிக் கட்சியில் இருக்கும் சிலரும் முயற்சி செய்தனர். கடைசியில் யார் அந்த நான்கு பேர் என்ற பட்டியலை வெளியிட்டுவிட்டது திமுக தலைமை.

தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ள இடங்களின் அடிப்படையில் மொத்தமுள்ள ஆறு இடங்களில் திமுகவுக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். அதில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே திமுக ஒப்புக்கொண்டதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக் ஓர்இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் மூன்று இடங்களில், மீண்டும் வில்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு இடங்களில் ஒன்றைச் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கத்துக்கும், மற்றொன்றை தி.மு.க மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராக உள்ள கவிஞர் சல்மாவுக்கும் ஒதுக்கியிருக்கிறது திமுக தலைமை.
எப்படிக் கிடைத்தது பதவி?
திமுகவில் பலரும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்த பதவிக்கு இந்த மூவரும் தேர்வானது எப்படி என்பது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், "சென்ற முறை கூட்டணிக் கட்சியில் இருக்கும் வைகோவுக்கு இடம் வழங்கப்பட்டிருந்தது. மீண்டும் இம்முறை அவர் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார். இதுகுறித்து திமுக தலைமையிடமும் முறையிட்டுப் பேசிய சமயத்தில், `இந்த முறை மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கவேண்டிய தேவை இருக்கிறது. எனவே, சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்கள் வழங்கப் பரிசீலனை செய்கிறோம்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. அடுத்ததாக இருந்த இடத்தில் வழக்கறிஞர் வில்சனுக்கு ஒதுக்கியிருக்கிறது.

கருணாநிதி மறைவு சமயத்தில் ஒரேநாளில் போராடி அண்ணா சதுக்கத்தில் இடம் பெற்றுக் கொடுத்த காரணத்துக்காக முதல்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தற்போது வரை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வில்சன் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டு இடங்களிலும் கட்சி, ஆட்சி சார்ந்த வழக்குகளில் ஆஜராகி தலைமையின் குட் புக்கில் இருக்கிறார். எனவே அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கவேண்டிய நிலையில் கடந்த முறை எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தமுறை மீண்டும் அவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்த நிலையில், முதன்மையானவர் இல்லத்தின் வழியில் முயற்சி செய்த சல்மாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கிறது. அப்துல்லாவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுக்க வாய்ப்புகள் அதிகம். கடைசியாக இருக்கும் இடம் தொமுச-வை சேர்ந்த யாருக்காவது கொடுப்பது வழக்கம். இந்தமுறை போட்டி அதிகமாக இருந்ததால், அடுத்த ஆண்டு வரும் இடத்தில் தொமுச-வுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தமுறை சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த தொமுச-வை சேர்ந்த நடராஜன் தரப்பினர் சற்று வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

திமுக தலைமையின் தனி கணக்கு
இந்த இடம்தான் தற்போது சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலும் திமுக தலைமை ஒரு தனி கணக்கு வைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் பொன்முடியும், சிவலிங்கமும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். பொன்முடிக்குக் கட்சி பதவியையும், அமைச்சர் பொறுப்பையும் பிடுங்கியதால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திமுக தலைமை மீது அதிருப்தியிலிருந்தார்கள். அந்த அதிருப்தியை போக்கவும், சேலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்கவும் சிவலிங்கத்துக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தமுறை, சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த சிலருக்கு அடுத்த வருடம் வாய்ப்பு வழங்கப்படலாம்" என்றார்கள் விரிவாக.