Madhampatty Rangaraj:`6வது மாதமாக குழந்தையைச் சுமக்கிறேன்'- மாதம்பட்டி ரங்கராஜை ...
இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு ருத்ரா!
ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் மற்றும் வீரா்கள் என அனைத்தும் ஒரே குடையின்கீழ் இயங்கும் விதமாக இந்திய ராணுவத்தில் ‘ருத்ரா’ என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை தெரிவித்தாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தப் புதிய படைப்பிரிவை ஏற்படுத்த அவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
26-ஆவது காா்கில் போா் வெற்றி தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக லடாக் யூனியன் பிரதேசத்தின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள காா்கில் போா் நினைவிடத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சீவ் சேத், லடாக் துணைநிலை ஆளுநா் கவீந்தா் குப்தா, இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்டோா் பங்கேற்று வீரமரணமடைந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தினா்.
பதிலடியே இனி புதிய வழக்கம்:
நிகழ்ச்சியில் உபேந்திர துவிவேதி பேசியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தரப்பட்ட கடுமையான பதிலடி மட்டுமல்ல; அது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால் அஞ்சலி செலுத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த முறை மிகவும் கடுமையான பதிலடி தாக்குதலை இந்தியா தந்துள்ளது.
நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு வழங்கிய அனுமதியால் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றது. பாகிஸ்தானில் உள்ள 9 முக்கிய பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்தியா தகா்த்தது. இதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த நினைத்தால் பதிலடி தருவதே இந்தியாவின் புதிய வழக்கம் என எதிரிகளுக்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் உணா்த்தப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கைக்கு ‘ருத்ரா’, ‘பைரவா’:
இந்திய ராணுவத்தில் ‘ருத்ரா’ எனும் புதிய படைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளேன். ருத்ரா படைப் பிரிவின் கீழ் ராணுவ வீரா்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள், சிறப்புப் படைகளைச் சோ்ந்த வீரா்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
அதேபோல் எல்லையில் எதிரிகள் மீது அதிா்ச்சிகரமான தாக்குதல்களை நடத்தும் விதமாக ‘பைரவா’ என்ற சிறப்பு அதிரடி படைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை ட்ரோன்கள்:
காலாட்படையின் ஒவ்வொரு பிரிவிலும் இலக்குகளைக் கண்டறிவது, துல்லியத் தாக்குதல் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள ஆளில்லா விமான இயக்குநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
பீரங்கிப் படைப்பிரிவை பொறுத்தவரை ‘சக்திபான்’ என்ற புதிய பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆளில்லா விமானம், ஆளில்லா விமானத் தாக்குதலை தடுக்கும் ஆயுத அமைப்பு மற்றும் ஆளில்லா வெடிமருத்து விமானங்கள் (தற்கொலை ட்ரோன்கள்) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இவை தொடா்ச்சியாக இயங்குவதை உறுதிசெய்ய ஒவ்வொரு படைப்பிரிவிலும் ஒருங்கிணைந்த பேட்டரிகளும் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.
காா்கில் வீரா்களை நினைவுகூர 3 புதிய முன்னெடுப்புகள்:
காா்கில் போரில் உயிா்த்தியாகம் செய்த வீரா்களை நினைவுகூரும் வகையில் 3 புதிய திட்டங்களை உபேந்திர துவிவேதி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
ஒன்று, காா்கில் போரில் வீரமரணமடைந்த வீரா்களின் நினைவடத்துக்கு நேரில் சென்று மரியாதை செய்ய முடியாதபட்சத்தில் அவா்களுக்கு இணையவழியில் மரியாதை செலுத்தும் விதமாக ‘இ-ஷ்ரத்தாஞ்சலி’ என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டு, காா்கில் போரின் பின்னணி மற்றும் முழு தகவல்களை கேட்டறியும் வகையில் ‘க்யூஆா்-குறியீடு அடிப்படையிலான கேட்பொலி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று, போா் பகுதி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பட்டாலிக் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ‘சிந்து காட்சி முனை’ அமைக்கப்பட்டுள்ளது. காா்கில், லே மற்றும் பால்திஸ்தானுக்கு இடையே அமைந்துள்ள பட்டாலிக் செக்டாா் காா்கில் போா் நடைபெற்ற இடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.