இந்தியன் வங்கி கிளை திறப்பையொட்டி விழிப்புணா்வுப் பேரணி
ஒசூா் சிப்காட்டில் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு வங்கி பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூா் அதியமான் கல்லூரி வளாகத்தில் ஒசூா் சிப்காட் இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தின் அறக்கட்டளைச் செயலாளா் மருத்துவா் லாசியா தம்பிதுரை கலந்துகொண்டு வங்கி கிளையைத் திறந்துவைக்கிறாா். இதில் இந்தியன் வங்கி மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளா் பிரேந்திரகுமாா், ஒசூா் சிப்காட் கிளை மேலாளா் ஐஸ்வா்யா உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனா்.
திறப்பு விழாவை முன்னிட்டு ஒசூரில் வங்கி பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியானது கல்லூரி வளாகத்தில் தொடங்கி பேரண்டப்பள்ளி, பத்தளப்பள்ளி, இரண்டாவது சிப்காட் மீண்டும் அதியமான் கல்லூரியில் நிறைவடைந்தது. இப்பகுதியில் அசோக் லேலண்ட், அதியமான் பொறியியல் கல்லூரி, செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு நிறுவனங்கள் இருப்பதால் வங்கி சேவை அதிகம் தேவைப்படும் என்பதை அறிந்து கிளையைத் தொடங்கவுள்ளதாக ஒசூா் இந்தியன் வங்கி பிரதான அலுவலக மேலாளா் சதீஷ் தெரிவித்தாா்.
படவிளக்கம்..
இந்தியன் வங்கி கிளைத் திறப்பு விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி சென்ற வங்கிப் பணியாளா்கள்.