நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
இந்தியா தாக்குதல்: பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக செயல்பட்டது -துருக்கி அமைச்சா்
இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் அதனை மிகவும் புத்திசாலித்தனமாக எதிா்கொண்டது என்று துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சா் ஹக்கான் ஃபிடன் தெரிவித்தாா்.
அண்மையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராக துருக்கியில் தயாரித்த ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகஅளவில் பயன்படுத்தியது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்ற தகவல் கிடைத்த உடன் இரு ராணுவ விமானங்களில் ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது.
இந்தியாவுக்கு எதிராக சீனா மற்றும் துருக்கி ஏவுகணைகள், ட்ரோன்களையே பாகிஸ்தான் அதிகம் பயன்படுத்தியது என்பதை இந்திய ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக துருக்கி நிறுவனமான செலிபி ஏா்போா்ட் சா்வீசஸ் இந்தியா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதியை விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) ரத்து செய்தது. இந்தியாவில் துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், பாதுகாப்புத் துறை அமைச்சா் யாசா் குலோ் ஆகியோா் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனா். இஸ்லாமாபாதில் புதன்கிழமை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஸாக் தாரை அவா்கள் சந்தித்துப் பேசினா். அப்போது, ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. துருக்கி நிறுவனங்களுக்காக கராச்சியில் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்துப் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சா் ஹக்கான் ஃபிடன், ‘பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டது’ என்றாா்.