காஸா: மேலும் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழப்பு
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 40 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.இது குறித்து அந்தப் பகுதி மருத்துவமனை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 17 பெண்களும் 10 குழந்தைகளும் அடங்குவதாகக் கூறினா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த, மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 10 போ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கான் யூனிஸ் நகரில் உள்ள நாசா் மருத்துவமனை தெரிவித்தது.
குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் காஸா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக ராணுவம் கூறியது. இதில் ஹமாஸ் அமைப்பினா், வெடிகுண்டு பொருத்தப்பட்ட கட்டமைப்புகள், ஆயுதரக் கிடங்குகள், ஏவுகணை ஏவுதளங்கள், சுரங்கங்கள் ஆகியவை அடங்கும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது. ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் சுமாா் 1,200 பேரைக் கொன்று 251 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.