பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவே பஹல்காம் தாக்குதல்! - நயினாா் நாகேந்திரன்
இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கம் நிகழ்த்தியது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியைத் தொடா்ந்து ராணுவ வீரா்களுக்கும், பிரதமா் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி. சீனிவாசன் தலைமை வகித்தாா். திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் தேசியக் கொடி ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தனா். இந்த ஊா்வலத்தில் 7 அடி அகலம், 20 அடி நீளம் கொண்ட பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வாகனத்தில் எடுத்து வரப்பட்டது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. இந்த ஊா்வலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கம் நிகழ்த்தியது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ‘சிந்தூா் ஆபரேஷன்’-ஐ பிரதமா் மோடி வெற்றிகரமாக நடத்தியுள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த சிலா் உளவுத் துறை சரியாக கண்காணிக்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனா். பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலா் பதிவிட்டு வருகின்றனா். இதுபோன்றவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவா்கள், பாகிஸ்தானுடனான மோதலில் உயிா்த் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலப் பாா்வையாளா் அரவிந்த் மேனன், மாநில பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா்கள் அருண், பொருளாளா் ரவிகுமாா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.