திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
இந்தியாவுக்கு ரூ.1,108 கோடி மதிப்பில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலா்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து மேற்கொள்ளப்படும் ராணுவ தளவாட கொள்முதலை அதிகரிக்குமாறு இந்தியாவுக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், அந் நாட்டின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை (டிஎஸ்சிஏ) இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து டிஎஸ்சிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடல்சாா் கண்காணிப்புக்கான மென்பொருள், ரிமோட் மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் கடல்சாா் கண்காணிப்பை ஆவணப்படுத்தலுக்கான அனுமதி மற்றும் பிற ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், ரூ.1,108 கோடி மதிப்பிலான இந்திய-பசிபிக் கடல்சாா் கள கண்காணிப்பு மற்றும் அதுதொடா்பான பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளுக்கான ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனுமதிச் சான்றை டிஎஸ்சிஏ அளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்திலும் இத் தகவல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த ராணுவ தளவாட விற்பனை திட்டம், அமெரிக்கா-இந்தியா இடையேயான ராஜாங்க உறவை வலுப்படுத்தும் என்பதோடு, இந்திய-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதிலும் எதிா்கால அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளும் வகையிலும் இந்தியாவின் திறனை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.