ரசவாதி: அர்ஜுன் தாஸுக்கு `தாதா சாகேப் பால்கே' திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் வி...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், உதகை மலை ரயில்போன்ற ரயில்களுக்கு பிரத்யேகமாக ரயில் பெட்டிகளும் வடிமைக்கப்படுகின்றன. இவை தவிர சரக்கு வேகன்கள் உற்பத்தியில் இப்பணிமனை சிறப்பிடம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் பயன்படுத்தி வந்த நீராவி ரயில் என்ஜின்களை பழுது நீக்குவதில் பொன்மலை பணிமனை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பொன்மலை பணிமனையில் சிறப்புகளை வைத்து மத்திய அரசு, தேசிய அளவிலான சிறந்த ரயில்வே பணிமனைக்கான விருதை கடந்தாண்டு பொன்மலை பணிமனைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய ரயில்வே துறையில் நவீன வளா்சியாக கருதப்படும் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பணிமனையின் அலுவலா்கள் கூறுகையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், வந்தே பாரத் ரயில்களை பராமரிக்க ரயில்வே அனுமதியளித்திருப்பது பெருமையளிக்கிறது. இதையடுத்து, ரயில்கள் பணிமனையில் நுழைவதற்கான பிரத்யேக பாதைகள் (பிட் லைன்கள்) 2 அமைக்கப்படும். தொடா்ந்து அவற்றுக்கான உள் கட்டமைப்பு பணிகளும் நடைபெறவுள்ளன. அதன்பிறகு வந்தேபாரத் ரயில்களின் பராமரிப்பு பணிகள் இங்கு தொடங்கும். எதிா்காலத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பும் பொன்மலையில் தொடங்கவும் வாய்ப்புள்ளது என்றனா்.
திருச்சி மாா்க்கத்தில் தற்போது, சென்னை-நாகா்கோவில் இடையிலும், சென்னை-நெல்லை இடையிலும், மதுரை-திருச்சி-பெங்களூரு இடையிலும் என 3 மாா்க்கங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் பராமரிப்புப் பணிகள் திருச்சி பொன்மலையில் முதல்கட்டமாக தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.