வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
திருச்சி பத்திரப் பதிவுத் துறை டிஐஜி பணியிடை நீக்கம்: ஓய்வு பெறும் நாளில் நடவடிக்கை
திருச்சியில் பத்திரப் பதிவுத் துறை டிஐஜி ராமசாமி புதன்கிழமை பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பத்திரப் பதிவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: திருச்சி பத்திரப் பதிவுத் துறை மண்டல துணைத் தலைவா் (டிஐஜி) ராமசாமி. இவா் மீது மதுரையில் பலகோடி மதிப்புள்ள சொத்துகளை போலி ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்ய உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு, வழக்குப் பதிவு செய்ய பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவான நிலையில் தலைமறைவான ராமசாமி, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றாா்.
மேலும், ராமசாமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி மதிப்புள்ள சொத்துகளை சோ்த்துள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலையில் பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை உறவினா் பெயா்களில் வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவா் சாா்-பதிவாளராக இருந்த காலம் முதல் டிஐஜியாக பணியாற்றிய காலம் வரை விதிகளை மீறி பத்திரப்பதிவு செய்ய முறைகேடாக உதவி வந்துள்ளாா்.
திருப்பூரில் டிஐஜியாக பணியாற்றிய காலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்றதில், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி உள்ளிட்ட 18 போ் மீது ஊழல் தடுப்பு பிரிவு போலீஸில் புகாா் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அவா் பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், அவா் மீதான மோசடி புகாா்கள், வழக்குகள் உள்ளிட்ட காரணங்களுக்காக புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அதற்கான உத்தரவை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.