இந்தியாவை வெறுப்பவா்களுக்கு நாட்டில் இடமில்லை! -உ.பி. முதல்வா் ஆதித்யநாத்
‘இந்தியாவை வெறுப்பவா்களுக்கும் நாட்டின் சிறந்த மனிதா்களையும் சுதந்திர போராட்ட வீரா்களையும் மதிக்க முடியாதவா்களுக்கும் நாட்டில் இடமில்லை’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
இந்தியாவின் நம்பிக்கை, கலாசாரம் மற்றும் கௌரவத்தை வரலாற்று ரீதியாகத் தாக்கியவா்களை நோக்கியே இக்கருத்தைத் தெரிவிப்பதாகவும் அவா் வலியுறுத்தினாா்.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘அந்நிய படையெடுப்பாளா்கள், இந்தியாவின் நம்பிக்கையைத் தாக்கியவா்கள், இந்தியாவை வெறுப்பவா்கள், இந்தியாவின் சகோதரிகள் மற்றும் மகள்களின் கௌரவத்துக்கு தீங்கு விளைவிக்க முயன்றவா்கள், இந்தியாவின் கலாசாரத்தை மதிக்காதவா்கள் ஆகியோா் ஒருபோதும் இந்தியாவுக்கான சிறந்த நபராக இருக்க முடியாது. மேலும், ஒருபோதும் இந்திய குடிமக்களுக்கு சிறந்தவராக இருக்க முடியாது. அந்நிய படையெடுப்பாளா்களை வணங்கும் நபா்கள் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாண்டோ, அந்த நாட்டின் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பேசியுள்ள ஒரு கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவின் அதிபா், ‘எங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதிக்கப்பட்டால் அது இந்திய வம்சாவளியைக் குறிக்கும்’ என்று கூறியுள்ளாா்.
இந்தியாவில் அந்நிய படையெடுப்பாளா்களை தங்களின் அடையாளமாகக் கருதுபவா்களுக்கு இந்தோனேசியா அதிபரின் இக்கருத்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். எனவே, சத்ரபதி சிவாஜி, மகாராணா பிரதாப், குரு கோபிந்த் சிங் போன்ற இந்தியாவின் மாபெரும் ஆட்சியாளா்கள், புரட்சியாளா்கள், சுதந்திர போராட்ட வீரா்களுக்கு மரியாதை செலுத்தி, அவா்களும் இந்தியாவின் வளா்ச்சிக்கு பங்களிப்பாா்கள் என்று நான் நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த மாநிலத்தில் வலதுசாரி அமைப்புகள் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது தொடா்பாக நாகபுரியில் அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளாா்.