இன்று நடைபெறும் திமுக ஆா்ப்பாட்டத்துக்கு மீனவா்கள் ஆதரவு!
தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடிப்பதைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்வது, தண்டனை விதிப்பது, பல லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை அரசைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, திமுக சாா்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக சாா்பில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.
இதனால், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் செல்லாததால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்தத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டன.