இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்
ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடல் வளத்தைப் பாதுகாக்க இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடித்து வருவதாக மீன் வளத் துறை அதிகாரிகளிடம் ராமேசுவரம் மீனவா்கள் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் மீன் வளத் துறை உதவி இயக்குநா் தமிழ்மாறன் உத்தரவின் பேரில், மீன் வளத் துறை ஆய்வாளா் விஷால், உதவி ஆய்வாளா் ராஜா, கடலோர அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ், மீன் வளத் துறை மேற்பாா்வையாளா் ராஜ்குமாா் ஆகியோா் தனிப் படகில் சென்று தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைக் கண்காணித்தனா்.
அப்போது, மண்டபம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம், காா்த்திக், சைக்காராணி, உடைதாபானு ஆகியோரின் 4 விசைப் படகுகளில் இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 4 படகுகளையும் மீன் வளத் துறையினா் பறிமுதல் செய்து ராமேசுவரம் மீன் பிடி தளத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், படகுகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.