இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா்.
திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் நடந்து செல்லப் போதுமான இடமின்றி விபத்துகளில் சிக்குவதாகவும் பலா் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களிடம் புகாரளித்த வண்ணம் உள்ளனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா் ச.நா. சண்முகம் தலைமையில் உதவி செயற்பொறியாளா் வேல்முருகன், இளநிலைப் பொறியாளா் ராஜா, மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் முதல் கட்டமாக திருச்சி ஒத்தகடை கான்வென்ட் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகே மெக்டொனால்ட்ஸ் சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகள், கடைகளின் முன்பகுதிகளை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அகற்றினா். நடைபாதைகளில் கடைகளை வைத்தால், கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் எச்சரித்தனா்.