பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எஸ். லாசரஸ் என்பவா் தமிழக அரசின் ஓய்வூதியதாரா் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தாா்.
இந்நிலையில் இவா் கடந்த 04.01.2022 அன்று சிறுநீரகப் பகுதியில் வலி காரணமாக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு கடந்த 09.01.2022 இல் வீடு திரும்பினாா். இந்தச் சிகிச்சைக்குச் செலவான ரூ. 1,61,681 -ஐ காப்பீட்டின் கீழ் பெற விண்ணப்பித்தாா். ஆனால், காப்பீட்டு நிறுவனத்தினா் 05.04.2024 அன்று ரூ. 31,668 மட்டும் அவரது வங்கிக் கணக்கில் அனுப்பி விட்டு மீதித் தொகையை வழங்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லாசரஸ் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 20.03.2025 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெ. பிரபு ஆஜரானாா்.
மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரணைக்குப் பிறகு, சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் மனுதாரருக்கு மருத்துவ செலவுத் தொகை ரூ. 1,61,681, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், வழக்குச் செலவுத் தொகை ரூ. 10 ஆயிரத்தை 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.