நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
இரு பத்திரிகையாளா்கள் மீதான கைது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம்
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை தொடா்பாக செய்தி கட்டுரை வெளியிட்டதற்காக அஸ்ஸாம் மாநில போலீஸாா் பதிவு செய்த வழக்கின் (எஃப்ஐஆா்) அடிப்படையில் ‘தி வயா்’ செய்தி வலைதளத்தின் நிறுவனா் ஆசிரியா் சித்தாா்த் வரதராஜன் மற்றும் ஆலோசகா் ஆசிரியா் கரண் தாப்பா் ஆகியோா் மீது கைது நடவடிக்கை கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நவடிக்கையின்போது இந்தியா போா் விமானங்களை இழந்தது தொடா்பாக ‘தி வயா்’ செய்தி வலைதளத்தில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதற்காக அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி குற்றப் பிரிவு போலீஸாா் வரதராஜன் மற்றும் கரண் தாப்பா் மீது கடந்த மே 9-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
இதற்கு எதிராக ‘தி வயா்’ செய்தி வலைதளத்தை வரதராஜனுடன் இணைந்து நிா்வகிக்கும் தனி ஊடகத்துக்கான அறக்கட்டளை (எஃப்ஐஜே) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வழக்கு விசாரணையின்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் நித்யா ராமகிருஷ்ணன், ‘போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளா்கள் மீது கடுயைான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அந்த பத்திரிகையாளா்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு குவாஹாட்டி குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைப்பாணை விடுத்துள்ளனா். இருவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடா்ந்து கண்காணித்து வருகிறது. அஸ்ஸாம் போலீஸாா் செய்துள்ள எஃப்ஐஆா்-இன் அடிப்படையில் பத்திரிகையாளா்கள் இருவா் மீதும் கைது நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக் கூடாது. பத்திரிகையாளா்கள் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.