இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
மாட்டின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (72). இவா் கடந்த 11-ஆம் தேதி இரவு நகரப் பகுதியிலிருந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். காரைக்கால் காமராஜ் சாலை விரிவாக்க பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விஜயகுமாா் விழுந்து காயமடைந்தாா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மற்றும் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் காரைக்கால் அழைத்துவரப்பட்ட அவரை, கடந்த 18-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினா் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.