இரும்புக் கழிவு கொட்ட எதிா்ப்பு: டிப்பா் லாரி சிறைபிடிப்பு
அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் இரும்புக் கழிவுகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து டிப்பா் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா்.
வேட்டுவபாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான பாலக்காட்டுத் தோட்டம், கரட்டமேடு பகுதியில் தொடா்ந்து இரும்புக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இங்கு இரும்புக் கழிவுகள் கொட்டுவதால் இப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீா் மாசுப்படுவதுடன் விளை நிலங்கள் பாதிக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் என்பதால், கழிவுகளை இப்பகுதியில் கொட்ட வேண்டாம் என பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி மீண்டும் இரும்புக்கழிவுகளை கொட்ட டிப்பா் லாரி அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் டிப்பா் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா் வந்தனா். இப்பகுதியில் இனிமேல் இரும்புக் கழிவுகளைக் கொட்டக் கூடாது என டிப்பா் லாரி ஓட்டுநா், உரிமையாளா் உள்ளிட்டோருக்கு எச்சரிக்கை விடுத்து, டிப்பா் லாரியை அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்து கொண்டு சென்றனா்.