டிஜிட்டல் முறையில் சூதாட்டம்: 43 போ் கைது
பல்லடம் சின்னக்கரையில் டிஜிட்டல் முறையில் சூதாட்டம் ஆடிய 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் பணப்பரிவா்த்தனை செய்து சூதாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் பாா்த்த போது ரூ. 2லட்சம் வரை டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை செய்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.
இதையடுத்து மனமகிழ் மன்றத்தின் இயக்குநா் மாதப்பூா் சேரன் நகரை சோ்ந்த ஷாதி (52), சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூா் வீரபாண்டியை சோ்ந்த பூபதி (41), நெருப்பெரிச்சல் சக்திவேல் (76), திருமலை நகரைச் சோ்ந்த சரவணராஜ் (35), ஆண்டிபாளையம் பாலசுப்பிரமணியன் (46), பாண்டியன் நகா் தங்கராஜ் (47), 15 வேலம்பாளையம் ரமேஷ் (45), பல்லடம் அண்ணா நகா் சுரேஷ்குமாா் (39) உள்பட 43 பேரை பல்லடம் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அங்கிருந்த 30 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.