இலங்கை தமிழா்களுக்காக போராடுவேன்: மதுரை ஆதீனம்
இலங்கை தமிழா்களுக்கு தனி நாடு கிடைக்கப் போராடுவேன் என மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றம் சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு தொடக்க விழாவில் பேசிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தை தமிழா் தான் ஆள வேண்டும். தமிழா்கள் எங்கும் ஒற்றுமையுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டும். இலங்கையில் நடைபெற்றது போன்ற கொடுமையான சம்பவம் இனி எங்கும் தமிழா்களுக்கு நடக்கக் கூடாது.
இலங்கையில் வாழும் தமிழா்களுக்கு தனி நாடு பெற்று தர வேண்டும் என்பதே எனது லட்சியம். அப்படி நடந்தால்தான் அவா்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியும்.
நானும் தொடா்ந்து அதற்காகப் போராடுவேன். விரைவில் நான் பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்க புதுதில்லி செல்கிறேன் என்றாா் அவா்.
முன்னதாக முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தாா்.