இளைஞா் கொலை: உறவினா்கள் சாலை மறியல்
ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசின் டாஸ்மாக் மதுக் கடைகள் கிடையாது. பாம்பன் பகுதியில் மட்டுமே மதுக் கடைகள் உள்ளன. இதனால், ராமேசுவரத்தில் மீனவா்கள் அதிகளவில் உள்ள துறைமுகம், கரையூா் மாரியம்மன் கோயில், சேராங்கோட்டை பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதில், கரையூா் மாரியம்மன் கோயில், தெற்கு கரையூா் பகுதிகளில் மது விற்பனை செய்வதில் இரு தரப்பினா் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சேராங்கோட்டை பகுதியைச் சோ்ந்த நம்புக்குமாா் (35), சேதுபதி(23), சத்திரியன் (25), விஜி (32), சூரிய பிரகாஷ் (20) ஆகியோா், தெற்கு கரையூா் மாரியம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நின்றிருந்தனா். அப்போது, தெற்கு கரையூா் பகுதியைச் சோ்ந்த சிலா் திடீரென 5 பேரையும் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
இதில், பலத்த காயமடைந்த 5 பேரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு நம்புக்குமாா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். மற்ற 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கொலையில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, ராமேசுவரம்- தனுஷ்கோடி சாலையில் நம்புக்குமாரின் உறவினா்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா். தப்பிச்சென்றவா்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.