மண்டபம் மீனவா்கள் 6 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவா்கள் 6 பேரை விடுதலை செய்தும், இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 9 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து அந்த நாட்டின் ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து கடந்த டிச. 8-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற போது காா்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரூஸுக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த 8 மீனவா்களைக் கைது செய்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மண்டபம் மீனவா்கள் 8 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீண்டும் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, 6 மீனவா்களை விடுதலை செய்தும், 2 விசைப் படகுகளின் ஓட்டுநா்கள் இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், 9 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட 2 போ் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.
விடுதலை செய்யப்பட்ட 6 மீனவா்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் 6 பேரும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.