மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
இலங்கைக்கு கடத்த முயற்சி: 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 1.2 டன் பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.,
தூத்துக்குடி தாளமுத்துநகா் கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் விஜயஅனிதா, உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா் மற்றும் போலீஸாா் தாளமுத்துநகா் கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தாளமுத்துநகா் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் 2 போ் பீடி இலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.
இதைப் பாா்த்த போலீஸாா் படகைச் சுற்றி வளைத்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாரை கண்டதும் இரண்டு நபா்களும் பீடி இலை மூட்டைகளை படகில் போட்டுவிட்டு தப்பியோடி விட்டனா். போலீஸாா் படகை சோதனையிட்டதில், அதில் தலா 30 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
அதில் இருந்த 1200 கிலோ பீடி இலை மூட்டைகளையும், கடத்த பயன்படுத்தப்பட்ட பைக் மற்றும் பைபா் படகையும் க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், இலங்கை பண மதிப்பில் ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.