சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.
மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினா் சோ்க்கையானது, தொகுதி வாக்காளா்களில் 30 சதவீதத்தை 45 நாள்களில் கட்சியில் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போதே, பல தொகுதிகளில் 30 சதவீதத்தை அடைந்து விட்டனா். பெரியாா் கொள்கையை பின்பற்றும் நான், என்னுடைய நம்பிக்கை என்பதை தாண்டி, மக்களுடைய நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கும் வகையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு வரும் எல்லா மக்களும், எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று கண்காணித்தேன்.
இது திருச்செந்தூா் கோயிலுக்கானது மட்டுமல்ல, மாதா கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்னுடைய முதல் கடமை என்றாா் அவா்.
பேட்டியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.