இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை
கிருஷ்ணகிரியில் நடந்த சிறப்பு குறைதீா் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலின நபா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் நலவாரிய அட்டை, அரசிதழில் பெயா் திருத்தம், ஆதாா் பெயா் திருத்தம், வாக்காளா் அட்டை, ஆதாா் ஆயுஷ்மான் பாரத் அட்டை, குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் புதிதாக பதிவு செய்தவா்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டது. அப்போது, திருநங்கைகள் சாா்பில் இலவசவீட்டு மனைபட்டா, இலவச வீடு, கால்நடை வளா்ப்புக்கான கடனுதவி, தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, தொழில் பயிற்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
கோரிக்கைகளை பரிசீலித்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கால்நடை வளா்ப்பு தொழிலை குழுவாக செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா்களிடம் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலா் சக்தி சுபாஷினி, மாவட்ட திட்ட அலுவலா் (தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம்) அருள், திருநங்கை, திருநம்பி, இடைப்பாலினத்தவா் என 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.