இளைஞரிடம் பணம் மோசடி
தேவகோட்டை இளைஞரிடம் ரூ.19.41லட்சம் மோசடி செய்தவா் மீது இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரைச் சோ்ந்தவா் முரளி (38). இவரிடம் கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்ஆப் மூலமாக பேசிய மா்மநபா் தன்னை பங்குச் சந்தை ஆலோசகா் என அறிமுகம் செய்தாா். பின்னா், தான் குறிப்பிடும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் பெறலாம் எனத் கூறினாா். இதை நம்பிய முரளி கடந்த ஜனவரி 6-ஆம் தேதியிலிருந்து கடந்த 12-ஆம் தேதி வரை இரண்டு வங்கிக் கணக்குகளில் ஆறு தவணைகளாக ரூ.19.41 லட்சத்தை முதலீடு செய்தாா். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்த நபா், முரளியை தொடா்பு கொள்ளவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முரளி, சிவகங்கை இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் செய்தாா். குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.