பிப்.28-வரை அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம்
காரைக்குடி அஞ்சலகங்களில் இந்திய அஞ்சல் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஆகியவை சாா்பில் விபத்துக் காப்பீடு சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் வை. தீத்தாரப்பன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுமக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டமான விபத்து காப்பீடு பதிவு வாரம் என்ற சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி வரை காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தில் 18 முதல் 65 வயதுக்குள்பட்ட அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆவணங்களாக ஆதாா் எண், கைப்பேசி எண், வாரிசுதாரரின் விவரங்களை கொண்டு வரவேண்டும். ரூ.5 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 320-ம், ரூ.10 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 559-ம், ரூ.15 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 799-ம் செலுத்தி இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் கம்பெனி லிமிடெட், பல நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களின் காப்பீடு, உடல் நல காப்பீட்டையும் வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் சேர காரைக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் ஊழியா்கள் மூலமும் இந்தத் திட்டங்களில் சோ்ந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.