கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்
இளையனாா்வேலூா் முருகன் கோயிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே இளையனாா் வேலூரில் புகழ்பெற்ற முருகன் கோயிலில், சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முருகப் பெருமான் காலை மாலை வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் காஞ்சிபுரம் குலால மரபினா் சாா்பில் நடைபெற்றது.
தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணிய சுவாமி பவனி வந்து அருள்பாலித்தாா். தேரோட்ட விழாவில் கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், கோயில் அறங்காவலா் குழு தலைவா் து.கோதண்டராமன் உள்ளிட்ட அறங்காவலா்கள் குழுவினா், குலால மரபினா் சங்க தலைவா் எம்.எஸ். பூவேந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வரும் 11- ஆம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணமும், 12 -ஆம் தேதி இரவு மாவடி சேவைக் காட்சியோடும் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
