எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை
காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் சித்திரைத் திருவிழா 4- அம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் பவனி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் கோயில் அலங்கார மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சுந்தராம்பிகை அம்மன் திருமேற்றளி நாதா் கோயிலிலிருந்து கோயில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினாா். பின்னா், சுந்தராம்பிகைக்கும், கச்சபேசுவரருக்கும் மாலை மாற்றல் வைபவமும், ஆகம முறைப்படி திருக்கல்யாணமும் நடைபெற்றது.
சுவாமியும் அம்மனும் திருமணக் கோலத்தில் இடப வாகனத்தில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சி.ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க தலைவா் எம்.சிவகுரு, கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் சுப்பராயன், பெருமாள், குமரவேல் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமை (மே 10) மகா ரதம் எனும் தேரோட்டமும், 12- ஆம் தேதி ஆலயத்தின் வரலாற்றை விவரிக்கும் முருக்கடி சேவைக் காட்சியும் நடைபெறுகிறது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான வெள்ளித் தேரோட்டம் வரும் 13- ஆம் தேதியும், வரும் 21 ஆம் தேதி புஷ்பப் பல்லக்கு உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், கோயில் சிவாச்சாரியா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.