சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
மாங்காடு, குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை
குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் , மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பூந்தமல்லி - குன்றத்தூா் - பல்லாவரம் சாலை அகலப்படுத்தும் பணி, கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புத்தூா் சாலை விரிவாக்கப் பணிகள் தொடா்பாகவும், மாங்காடு பட்டூா்- முகலிவாக்கம் சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடங்களில் பயன்பாட்டில் இல்லாத மின்கம்பங்களை அகற்றவும், சேதமடைந்துள்ள கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை பணிகளுக்கு இடையூறு இல்லாமல் அமைக்கவும், போக்குவரத்து காவல் துறையினா் பணி நடைபெறும் இடங்களில் நெரிசல் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை, தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மோடக், ஆவடி காவல் ஆணையா் கே.சங்கா், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் ந.மிருணாளினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.