"இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்" - சீமான் ஆவேசத்தின் பின்னணி என்ன?
"இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு சிறைவாசிகளுக்குச் சித்ரவதை நடக்கிறது" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை மதுரையில் சந்தித்த சீமான், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மூவரும் விசாரணை சிறைக்கைதிகளாகவே 15 ஆண்டாக சிறையில் உள்ளார்கள். அவர்களை சிறையில் போலீசார் அடித்துச் சித்ரவதை செய்கிறார்கள்.
குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இறக்கும் தறுவாயில் உள்ள கைதிகளைக் கூட விடுதலை செய்யவில்லை. இஸ்லாமிய மக்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு எனச் சொல்கிறார்கள், சிறையிலேயே வைத்துப் பாதுகாப்பீர்களா?
இஸ்லாமியத் தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும். இஸ்லாமியச் சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார் ஸ்டாலின். இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உடல்நிலையைக் கருதி கைதிகளை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு விட முடியாது எனப் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்துத் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.